வியாழன், 8 செப்டம்பர், 2011

“ஜே வானொலி”

                                                                     http://jeyfm.com/
நாளுக்கு நாள் தொழில்நுட்ப வளர்ச்சியின் வேகமும், அதன் தேவையும் அதிகரித்து கொண்டுவருகையில் ஊடகத்துறையும் அதனை சாதகமாக பயன்படுத்தி வருகின்றது என்பதற்கு குறிப்பாக இணையதள வானொலிகளை தக்க உதாரணமாகச்சொல்லலாம். மக்களிடையே இணையத்தின் பாவணை அதிகரித்து வருவதால் இணைய வானொலிகளின் வருகையும் அதிகரித்து வருகின்றது எனலாம்.
இணையத்தை உபயோகித்தபடியே வானொலியையும் கேட்பதற்கான வாய்ப்பு இதிலிருப்பது வசதியான வாய்ப்பாகும்.

அந்த வகையில் புதிய பரிமாணத்தொடும், புதிய தொழில்நுட்பவசதிகளைக்கொண்டும் பரிட்ச்சாத்த ஒலிபரப்பிலேயே பல நேயர்களை தன்னகத்தே கொண்டு வந்துள்ளது "ஜே இணையதள வானொலி".http://jeyfm.com/ இதன் சேவை மற்றைய இணையதள வானொலிகளிளிருந்து முற்றிலும் வேறுபட்டு நிகழ்ச்சிகளின் தரத்திலும், ஒலிநயத்திலும் சிறப்பாக இருக்கின்றது.

ஜே வானொலியைகுறித்து அதன் முகாமையாளர் கூறுகையில், நிகழ்ச்சிகள் இந்தியா,இலங்கை மற்றும் உலகின் பல்வேறு நாடுகளில்லிருந்தும் மூத்த அறிவிப்பாளர்கள் முதல் இளம் அறிவிப்பாளர்கள்வரை அறுசுவை நிகழ்ச்சிகள் தொகுத்து வழங்கவிருப்பது வானொலித்துறையில் புதிய முயற்சியாகும் என்றும், பெரியவர் முதல் இளவயதினர் வரை கேட்டு மகிழக்கூடிய நிகழ்ச்சிகள் ஒலிபரப்புசெய்யவிருப்பதால் நல்ல வரவேற்பை பெரும் என்றும் தெரிவித்தார்.

மேலும் ஜே வானொலியை இணையவசதியுள்ள கணனிகளில் மட்டுமின்றி ஐ போன்களிலும் துல்லியமான ஒலிநயத்துடன் கேட்டு மகிழும் வாய்ப்பு கூடுதல் வசதியாகும்.
வானொலித்துறையில் புதிய புரட்சி படைக்கவிருக்கும் ஜே வானொலியின் வரவு நேயர்களுக்கு இனிப்பான செய்தியாகும். மிக விரைவில் எதிர்பார்ப்போம் ஜே வானொலியை.
http://jeyfm.com/

வெள்ளி, 29 ஜூலை, 2011

ஜூலை கலவரமும் நானும்!

ஜூலை மாதம் வந்தாலே கருப்பு ஜூலையும் வந்துவிடும். ஏற்கனவே வெளியிட்ட பதிவை மீண்டும் பதிவிடுகிறேன்.





பச்சைப்பசேல் விரிப்புடுத்திய அழகிய மலை முகடுகளின் இடையேதான் எங்கள் வீ(கூ)டு இருந்தது. பாலர்பருவ வயதின் நினைவுகளிலும், மனக்கண்களிலும் அதுவோர் விசாலமான வெள்ளித்திரை.


இலங்கையின் நாவலப்பிட்டியெனும் நகரத்திலிருந்து உள்ளமைந்த பல்லேகமவெனும் சிற்றூராகும். பெரும்பாலும் பெரும்பான்மையினத்தவர் மத்தியில் சிறுபான்மைத்துளியாக நாமும் நம்மைப்போல் நாலுபேருமாய் வாழ்ந்துவந்த சம்பவத்தளமது.


வழமைக்கு மாறாகவும் இயல்புக்கு வேறாகவும் மாலை நேரத்தில் விளையாடுவதற்காய் வெளியே செல்வதைத்தடுத்து வைத்தார் என் அப்பா.


ஏன் என்னைத்தடுத்தார் என்பது பின்புதான் என் முத்திய மனசுக்குப்புரிந்தது. பொழுது விடிந்தால் பாலர் பாடசாலையும் மாலை முழுவதும் விளையாட்டும் பின்பு உறக்கமும்தான் என் உலகமாயிருந்தது. அப்போது அப்பாவின் கட்டளையையும் மீறி அயல்வீட்டு பெரும்பான்மையின பெண் நிலாந்தியுடன் விளையாடியதைக்கண்டித்து என்னை உள்ளெ போக உத்தரவிட்டார் என் அப்பா.


அப்போ இருள் கவ்வும் மாலை வேளை6.30த் தாண்டியிருக்குமென நினைக்கிறேன். இரவுச்சாப்பாட்டிற்காய் எனது பாட்டியார் அடுக்களையில் ரொட்டி சுட்டுக்கொண்டிருந்தாள். நானும் என் முக்காலியில் உட்கார்ந்தபடி சாப்பிடத்தயாரானேன். அப்போது அங்கே மிருகத்தனமான,மூர்க்கத்தனமான பல மனிதர்களது குரல்கள் எங்கள் வீட்டைநோக்கி நகர்ந்து கொண்டு வருகிறது. நடக்கப்போவதை ஊகித்து அறிந்துகொண்ட என் அப்பாவும் சித்தப்பா,சித்தி,அய்யா(அப்பாவின் தகப்பனார்) எல்லோரும் வீட்டின் பின்புறவழியால் ஓடத்தயாரானோம். அவர்கள் விசிலடித்து ஆரம்பிக்க நானும் ஓட்டத்தை ஆரம்பித்தேன்.



என் கைகளைப்பிடித்து சரசரவென என்னை இழுத்துச்செல்லும் என் சித்திதான் அப்போதைக்கு ராட்சசி. போதாகுறைக்கு ஆசையாய் எப்போதும் என் கால்களைக்கவ்விகொள்ளும் மண்நிற உயர்ந்த செறுப்பை கழற்றி வீசியெறிந்தவளும் அவளே. அப்போதைக்கு அதுதான் என் பெரிய இழப்பு.


வீட்டைவிட்டு வெளியேறி சுமார் 500Mதூரத்தைக்கடந்த்தபோது எங்கள் வீட்டின் யன்னல் கண்ணாடிகள் அடித்து நொறுக்கப்படும் சத்தம் தெளிவாகக்கேட்டது. பெரும்பான்மையின சகோதரர்கள் கைகளில் கோடாரியும்,உருட்டுக்கட்டைகளும் சகிதம் எங்கள் வீட்டை சூரையாடினர். கும்மென்ற இருட்டின் நடுவே அந்தப்பிரதேசத்தையடைந்தபோது அங்கே ஒரு கும்பல் எங்களை நெருங்குகிறது. "கொட்டி எனவா..கொட்டி எனவா..." புலி வருது..புலி வருது..என்ற புலம்பலோடு நம் பெரும்பான்மையின சகோதரர்கள்.உங்கள் இனத்தவர்களால் ஆபத்துவந்தால் எங்களை நீங்கள் காப்பாற்றுங்கள். எங்கள் இனத்தவர்களால் ஆபத்து வந்தால் நாங்கள் உங்களைக்காப்பாற்றுகிறோம் என்பதுதான் காட்டுக்குள் நிகழ்ந்த கைச்சாத்திடப்படாத ஒப்பந்தம்.

வாழவேண்டிய வயதுள்ளவர்கள் நீங்கள்! எங்கேனும் மரங்களில் ஏறி பிழைத்துக்கொள்ளுங்கள் என்பது பாட்டியின் அறிவுரை. உயிர்பிழைக்கவேண்டி ஓடிவரும் வேளையில் தன் பழைய டிரான்சிஷ்டர் பெட்டியைத்தேடியெடுப்பதற்காய் சமயமெடுத்த அய்யாவை திட்டித்தீர்த்தார்கள். உண்மையில் அவறொரு முற்போக்குவாதியாயிருப்பார் போலிருக்கிறது.


ஒருவழியாக ஒரு பெரும்பான்மையினரின் உதவியுடன் அவர்கள் குளியலறை எங்கள் தஞ்சமாக மாறியது. மூச்சுவிடும் சத்தம் கூடக்கேட்காமல் குந்தியிருந்தோம். இத்தனைக்கும் மத்தியில் நானோ என்னதான் நடக்கிறதென்பது புரியாது பிதுங்கிய விழிகளோடும் விம்மிய அழுகையோடும் வாயடைத்து பயந்துபோய் இருக்கிறேன். அப்போதே எனக்குள் சகிப்புத்தன்மை.


ஓசையின்றி அழுதுகொண்டிருந்த என் 5வயது நிலைகண்ட அய்யா எப்போதும் யாரிடமும் அதை நினைவுகூறுவார்.அதனால் என்னவோ என்மீது பாசம் அதிகமென நினைக்கிறேன்.


அன்றையப்பொழுதும் விடிந்தது. முந்தையநாள் பாட்டி சுட்டுக்கொண்டிருந்த ரொட்டித்துண்டுகளை யாரோ கொண்டுவந்து தந்திருந்தார்கள். இங்கே ஒரு உண்மையைச்சொல்லவேண்டும். எந்த இனத்தவர்களால் துரத்தப்பட்டோமோ அவ்வினத்தவர்களினாலேயே பாதுகாக்கவும்பட்டோம்.


எங்களைப்போல் மேலும் பலரது நிலைமைகள் இப்படியிருக்க எங்கெல்லாமோ அலைந்து திரிந்து ஒரு விசாலமான வீட்டிலே தஞ்சமடைந்தோம் நாமெல்லோரும். அப்போது முதல் அதுதான் முகாம் நாங்கள்தான் அகதிகள்.கூடு கலைக்கப்பட்டு இன்றும் கூடின்றியலையும் சிதறடிக்கப்பட்ட பறவைகள் நாங்கள்.


இற்றைக்கு 26வருடங்களைக்கடந்து வந்தாலும் நெஞ்சைவிட்டகலாத நீங்காத கசப்பான அனுபவங்களை என்பதிவிலிட்டு உங்களுடன் பகிர்ந்துகொள்வதில் ஆறுதலடைகிறேன். வாழ்க தமிழ்! வழர்க தமிழ் சமுதாயம்!

வெள்ளி, 26 நவம்பர், 2010

இலங்கை சென்றபோது!

17 வருடங்களின் பின் நான் படித்து வளர்ந்த யாழ்ப்பாணத்திற்கு சென்றுவர வாய்ப்பு கிடைத்தது. விடுமுறையில் யாழ்ப்பாணத்திற்கும் போய் வரவேண்டும் என்கிற ஆசையும் ஆவலும் என்னைத்தூண்டவே ஆரம்பமானது பயணம். முன்பெல்லாம் யாழ் - கொழும்பு பயணமென்றால் நினைக்கும்போதே வாழ்க்கை வெறுத்துப்போகும் ஒரு தடைகளப்போட்டியாகும்.தரைவழி, கடல்வழி, குண்டுகுழி, சோதனைச்சாவடி, தடுப்புக்காவல், இத்தனைக்கும் மத்தியில் ஒரு சிறிய நாட்டிற்குள்ளேயே பல நாட்கள் பயணிக்கும் கொடுமையான,பயங்கரமான பயணமாகும்.


பயணித்தவர் போய் சேர்ந்துவிட்டார? அல்லது அங்கிருந்து பயணித்தவர் வந்துவிட்டாரா? என்பதை அறிய முடியாத பின்னடைந்த நிலையில் அன்றைய A9 பாதையும், யாழ்ப்பாணமும். இம்முறை இரவு 10 மணிக்கு கொழும்பில் ஆரம்பித்த பஸ் பயணம் காலை 6 மணிக்கு யாழ் நகரத்தை அடைந்தது எனக்கு ஆச்சர்யத்தைத்தந்தது. நான் பயணித்த அரசு பஸ்சின் சாரதியின் வேகம் எம்மை மேலோகத்திற்கே கொண்டு சேர்த்து விடுவாரோ என்ற அச்சத்தை வரவைத்தது. எதோ அவர்தான் இறுதி யுத்தத்திலே போரிட்டு வெற்றி பெற்றவர் போன்ற இறுமாப்பு. சென்னைத்தமிழில் சொல்வதானால் "தெனாவட்டு". குண்டும், குழியும் நிறைந்த பாதைகளிலெல்லாம் பஸ் பாய்ந்து பறந்துதான் சென்றது.

 பின்னர்தான் அறிந்துகொண்டேன் இதுபோன்ற இரவுநேர பயணங்களில்தான் அதிகமான விபத்துக்கள் நிகழ்வதாக. கடவுளுக்கே நன்றி பத்திரமாக போய்வந்தேன்.
 A9 பாதையின் இருபுறங்களிலும் ஊர் பெயர்பலகைகள் எங்களை சகோதரமொழியில்தான் வரவேற்கின்றது. என்தாய்த்தமிழ் மொழியை தேடித்தான் காணவேண்டியதை நினைக்கும் போது

நெஞ்சம் கனக்கிறது. ஆனால் ஒரு தனியார் வானொலிமட்டும் கெம்பீரமாக தமிழில் வரவேற்பதைக்கானும்போது சற்றேனும் மனம் குளிர்கின்றது.


யாழ்நகரை அடைந்ததுமே மனதுக்குள் தானாகவே "ஞாபகம் வருதே ஞாபகம் வருதே" பாடல் இசைக்க ஆரம்பிக்கின்றது. யுத்தத்திலே குடும்பங்களைப்பிரிந்து, உறவுகளைபிரிந்து,உடைமைகளையிழந்து சோகத்தின் மத்தியில் பயணிக்கும் தமிழர்களுக்கோ திண்டாட்டம்.
விடுமுறை நாட்களில் கூட்டம் கூட்டமாய் சுற்றுலாச்செல்லும் பெரும்பான்மையின சகோதரர்களுக்கோ கொண்டாட்டம். யாழ் செல்லும் ஒவ்வொரு சுற்றுலா பஸ்ஸிற்கும் அரசதரப்பு 25000 ரூபாய்களை வழங்குவதாக செய்திகள் வந்தாலும் இதில் எந்த அளவுக்கு உண்மை என்பது தெரியவில்லை.

 நான் வளர்ந்த ஊராகிய மானிப்பாயை அடையும் போது புதிய புதிய கட்டிடங்கள் உயர்ந்து நிற்கின்றது. அத்தனையும் வங்கிகள், வியாபாரஸ்த்தலங்கள். மானிப்பாய் இந்துக்கல்லூரி புதுப்பொலிவுடன் காட்சியளிக்கின்றது. என்சிறு வயதுப்பள்ளிககூடமாகிய விவேகானந்த வித்தியாசாலை பெயர்பலகை அன்று போலவே அப்படியே இருக்கின்றது. அந்நேரத்தில்தான் மானிபாய் அமெரிக்கன் சிலோன் மிசன் தேவாலயமும் 200வது வருட கொண்டாட்டத்திற்கு ஆயத்தமாகிக்கொண்டிந்ருதது.

யாழ்ப்பாணத்தில் பல இந்தியநிறுவனங்களும்,சிங்கள தொழிலதிபர்களும் முதலீடு செய்து வியாபாரம் ஆரம்பிக்கின்றார்கள். தனியார் தொலைபேசி நிறுவனங்கள் போட்டி போட்டுக்கொண்டு தங்கள் சேவையை வழங்குகின்றது. எல்லோரிடமும் இப்போ கைத்தொலைபேசி இருப்பது வசதியான வாய்ப்பாகும். எதோ ஒருவகையில் அபிவிருத்தியடைந்தால் நல்லதுதான் காலம் காலமாய் அங்கு வாழும் தமிழர்களின் வயிற்றிலடிக்காதவகையில்.

இனபேதம், மொழிபேதம், வர்க்கபேதமின்றி யாவரும் வாழப்பழகிக்கொண்டால் இலங்கையோர் சுந்தரபூமியாகும். அப்போ வடக்கில் மட்டுமல்ல எத்திசையிலும் வசந்தம்தான்!

வியாழன், 16 செப்டம்பர், 2010

முகப்புத்தகத்திலேயே எனது பொழுதுகள்!


முன்பெல்லாம் புத்தகங்களை வாசிப்ப்தில் எனது பொழுதுகள் கழியும். ஆனால் இப்போதெல்லாம் முகப்புத்தகத்திலேயே எனது பொழுதுகள் மூழ்கிக்கிடக்கின்றது.  Face book த்தான் முகப்புத்தகமென்று குறிப்பிட்டேன். Facebook ற்க்கு தமிழாக்கத்தை கொடுத்த பெருமையும்,உரிமையும் எனக்குத்தான் என்பதில் ஒரு பெருமிதம். இதனை நண்பர் கோமஸ் அண்ணா ஆமோதிக்கின்றார். இந்த புத்தகத்திற்குள் எப்போது நான் மூழ்கினேன் என்பது எனக்கே தெரியாது. இதைக்குறித்து பதிவு எழுதவேண்டுமென்று நினைத்திருந்த போதே நினைத்த பல காரியங்களை பதிவர் சினேகிதி தனது பதிவில் குறிப்பிட்டிருக்கிறார். இது எனக்கு மட்டுமல்ல பலரது பொழுதுகள் Facebook ஆரம்பித்துFacebook இல் தான் முடிகிறது என்று குறிப்பிடுகிறார்கள்.

உண்மையில் இன்றைய காலக்கட்டத்தில் பல சமூகத்தொடர்பு தளங்கள் உலாவந்தாலும் முகப்புத்தகம் அதன் வாசகர்களிடத்தில் நல்ல பெயறெடுத்துள்ளது எனலாம். வெறுமனே நம்முடைய படங்களை வெளியிட்டு நண்பர்களின் ஆல்பத்தையும் பார்வையிடுவதற்குமட்டுமல்லாது,எங்கோவிருக்கும் நம் பால்ய சினேகிதர்களை ஒருங்கிணைக்கும் அற்புத தளமாக செயல்படுகிறது.


. Facebook இன் வரலாற்றினை பார்ப்போமேயானால் Mark Zuckeburd எனும் 25 வயது Harvard பல்கலைக்கழக மாணவன் 2004ம் ஆண்டு மாசி 4ம் திகதி ஒரு செயற்பாட்டிற்காக சக மாணவர்களுடன் சேர்ந்து உருவாக்கிய தளமேFacebook எனும் சமூகத்தொடர்பாடல் வலையமைப்பாகும். சினேகிதி குறிப்பிட்ட்தைப்போல இதில் கோழி வளர்ப்பதும், கத்தரிக்காய் நடுவதும்,பரிசுப்பொருள்கள் தருவதும் எரிச்சலூட்டும் விசயங்களும் அகற்றப்படவேண்டிய விசயங்களுமாகும்.

நான் இப்போ என்ன செய்துகொண்டிருக்கிறேன்,எங்கெல்லாம் போய் வந்தேன் என்பதை உடனுக்குடன் எனது டிஜிடல் கமராவிலோ,கைத்தொலைபேசியின் வாயிலாக சுட்டுத்தள்ளியதை அப்ப்ப்போ சுடச் சுட நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளலாம்.தொடர்பு முறிந்துபோன எமது நண்பர்களை இந்த தளத்தில் தேடிக்கண்டுபிடிக்கலாம் என்பது இதன் சிறப்பம்சமாகும். ஒவ்வொருவரும் தங்கள் நண்பர்களின் எண்னிக்கையை அத்திகரிப்பதிலேயேசந்தோசப்படுகிறார்கள். ஒரு சில நாடுகளில் இதன் சேவை தடைசெய்யப்பட்டும், பல சிக்கல்கள்,சர்ச்சைகளைச்சந்தித்தாலும் 350 மில்லியன் பாவனையாளர்களைத்தன்னுள் கொண்டுள்ளது.
எப்படி உருவானது என்பதினை சித்தரிக்கும் வண்ணமாக Harvard எனும் திரைப்படம் வெளிவரவிருக்கிறது.

செவ்வாய், 3 ஆகஸ்ட், 2010

ஈச்சம் பழம்!

வெயிலின் கொடுமை தாங்கமுடியவில்லை! வேலைப்பளுவும் சொல்ல முடியவில்லை! இவற்றைக்காரணம் காட்டி கடந்த ஏப்பிரல் மாதத்திற்குப்பின் எந்த பதிவும் இடவில்லை. மீண்டும் ஒரு மொக்கைப்ப்திவை உங்களிடம் ஒப்புவிக்கிறேன். இவற்றுக்கிடையில் ஜூலைக்கலவரமும் நானும்” எனும் பதிவை மீள்பதிவேற்றினேன்.


சரி விசயத்திற்கு வருவோம். இந்த பேரீச்சம் பழம் இருக்கிறதே பேரீச்சம் பழம், இது உடலுக்கு நல்லதா என்றால் மிகவும் நல்லது. ரொம்ப பேர் கூடாது என்கிறார்கள்.இப்படி வலம்புரி ஜானைப்போல பேச வரல்லைங்க. பேரீச்சம் மரம் எப்படி இருக்கும்? எப்படி பூக்கும்,காய்க்கும்,பழுக்கும் என்பது அமீரகத்திற்கு வந்த பின்புதான் காணும் வாய்ப்புகிடைத்தது
ஈச்சம் பழம்!

எங்கள் குடியிருப்பிற்கு பின்புரமாக ஒரு சிறிய மரம் இருந்தது அது கொத்தாக காய்த்திருக்கும் அழகே தனியழகு. என் கமராவில் கிளிக் செய்த அந்த படங்களை உங்களுடன் பகிர்ந்து கொள்கின்றேன்.

வெள்ளி, 9 ஏப்ரல், 2010

சிரிப்பு வருது சித்தப்பா!














































ஞாயிறு, 7 பிப்ரவரி, 2010

டுபாயில் ஹலோ எஃப்.எம்







தமிழ்நாட்டில் ஊடகத்துறையில் முன்நிற்கும் நிருவனமான மலர் பப்ளிகேசன் நிருவனத்தின் சார்பில் பல வானொலி நிலையங்கள் இயங்கிவருகின்றன. குறிப்பாக தமிழ்நாட்டின் பல முக்கிய நகரங்களான சென்னை,மதுரை,திருநெல்வேலி,தூத்துக்குடி,கோயம்புத்தூர்,பாண்டிச்சேரி மற்றும் திருச்சி போன்ற நகரங்களில் ஹலோ எஃப்.எம் ஒலித்துவருகின்றது.

பல்வேறு தமிழ் பண்பலை வானொலிகளின் வரிசையில் ஹலோ எஃப்.எம் தனெக்கென நேயர்களிடத்தில் ஒரு தனியிடத்தைப்பிடித்துள்ளது.

பத்திரிகைத்துறையிலும்,வானொலித்துறையிலும் வெற்றிக்கொடிகட்டிய மலர் பப்ளிகேஷன் நிருவனம் டுபாயிலும் தனது காலடியை எடுத்து வைக்கிறது.

24 மணிநேர தமிழ் வானொலி சேவை துவங்கப்படவுள்ளது என்பது தமிழ் வானொலி நேயர் நெஞ்சங்களுக்கு இனிப்பான செய்தியாகும்.

அமீரகத்தில் ஏற்கனவே ரேடியோ ஏசியா நிருவனத்துடன் இணைந்து இலங்கை மகாராஜா நிருவனம் சக்தி எப்.எம் வானொலியை நடாத்தி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

சக்தி எப்.எம் அண்மையில் தனது சேவையினை ஏ. எம் அலை வரிசைக்கு மாற்றிக்கொண்டது.

இந்நிலையில் பண்பலையில் ஹலோ எஃப்.எம் மின் வரவினால் அமீரகத்தில் இரண்டு வானொலிகள் போட்டி போடக்கூடிய ஆரோக்கியமான வாய்ப்பிருப்பதாக வானொலி அவதானிகள் கருத்து தெரிவிக்கின்றனர்.

ஹலோ எஃப்.எம் மின் பரீட்சாத்த ஒலிபரப்பு இவ்வருடம் ஜனவரி 14 முதல் பண்பலை 89.5 அலை வரிசைல்யில் புஜைராவில் இருந்து ஒலிபரப்பாகிவருகின்றது.

கூடிய விரைவில் பல்சுவை நிகழ்ச்சிகளுடன் இதன் சேவை அமீரகமெங்கும் ஒலிக்கவிருக்கின்றது.