திங்கள், 26 அக்டோபர், 2015

இலங்கை சென்றபோது!

17 வருடங்களின் பின் நான் படித்து வளர்ந்த யாழ்ப்பாணத்திற்கு சென்றுவர வாய்ப்பு கிடைத்தது. விடுமுறையில் யாழ்ப்பாணத்திற்கும் போய் வரவேண்டும் என்கிற ஆசையும் ஆவலும் என்னைத்தூண்டவே ஆரம்பமானது பயணம். முன்பெல்லாம் யாழ் - கொழும்பு பயணமென்றால் நினைக்கும்போதே வாழ்க்கை வெறுத்துப்போகும் ஒரு தடைகளப்போட்டியாகும்.தரைவழி, கடல்வழி, குண்டுகுழி, சோதனைச்சாவடி, தடுப்புக்காவல், இத்தனைக்கும் மத்தியில் ஒரு சிறிய நாட்டிற்குள்ளேயே பல நாட்கள் பயணிக்கும் கொடுமையான,பயங்கரமான பயணமாகும்.


பயணித்தவர் போய் சேர்ந்துவிட்டார? அல்லது அங்கிருந்து பயணித்தவர் வந்துவிட்டாரா? என்பதை அறிய முடியாத பின்னடைந்த நிலையில் அன்றைய A9 பாதையும், யாழ்ப்பாணமும். இம்முறை இரவு 10 மணிக்கு கொழும்பில் ஆரம்பித்த பஸ் பயணம் காலை 6 மணிக்கு யாழ் நகரத்தை அடைந்தது எனக்கு ஆச்சர்யத்தைத்தந்தது. நான் பயணித்த அரசு பஸ்சின் சாரதியின் வேகம் எம்மை மேலோகத்திற்கே கொண்டு சேர்த்து விடுவாரோ என்ற அச்சத்தை வரவைத்தது. எதோ அவர்தான் இறுதி யுத்தத்திலே போரிட்டு வெற்றி பெற்றவர் போன்ற இறுமாப்பு. சென்னைத்தமிழில் சொல்வதானால் "தெனாவட்டு". குண்டும், குழியும் நிறைந்த பாதைகளிலெல்லாம் பஸ் பாய்ந்து பறந்துதான் சென்றது.

 பின்னர்தான் அறிந்துகொண்டேன் இதுபோன்ற இரவுநேர பயணங்களில்தான் அதிகமான விபத்துக்கள் நிகழ்வதாக. கடவுளுக்கே நன்றி பத்திரமாக போய்வந்தேன்.
 A9 பாதையின் இருபுறங்களிலும் ஊர் பெயர்பலகைகள் எங்களை சகோதரமொழியில்தான் வரவேற்கின்றது. என்தாய்த்தமிழ் மொழியை தேடித்தான் காணவேண்டியதை நினைக்கும் போது

நெஞ்சம் கனக்கிறது. ஆனால் ஒரு தனியார் வானொலிமட்டும் கெம்பீரமாக தமிழில் வரவேற்பதைக்கானும்போது சற்றேனும் மனம் குளிர்கின்றது.


யாழ்நகரை அடைந்ததுமே மனதுக்குள் தானாகவே "ஞாபகம் வருதே ஞாபகம் வருதே" பாடல் இசைக்க ஆரம்பிக்கின்றது. யுத்தத்திலே குடும்பங்களைப்பிரிந்து, உறவுகளைபிரிந்து,உடைமைகளையிழந்து சோகத்தின் மத்தியில் பயணிக்கும் தமிழர்களுக்கோ திண்டாட்டம்.
விடுமுறை நாட்களில் கூட்டம் கூட்டமாய் சுற்றுலாச்செல்லும் பெரும்பான்மையின சகோதரர்களுக்கோ கொண்டாட்டம். யாழ் செல்லும் ஒவ்வொரு சுற்றுலா பஸ்ஸிற்கும் அரசதரப்பு 25000 ரூபாய்களை வழங்குவதாக செய்திகள் வந்தாலும் இதில் எந்த அளவுக்கு உண்மை என்பது தெரியவில்லை.

 நான் வளர்ந்த ஊராகிய மானிப்பாயை அடையும் போது புதிய புதிய கட்டிடங்கள் உயர்ந்து நிற்கின்றது. அத்தனையும் வங்கிகள், வியாபாரஸ்த்தலங்கள். மானிப்பாய் இந்துக்கல்லூரி புதுப்பொலிவுடன் காட்சியளிக்கின்றது. என்சிறு வயதுப்பள்ளிககூடமாகிய விவேகானந்த வித்தியாசாலை பெயர்பலகை அன்று போலவே அப்படியே இருக்கின்றது. அந்நேரத்தில்தான் மானிபாய் அமெரிக்கன் சிலோன் மிசன் தேவாலயமும் 200வது வருட கொண்டாட்டத்திற்கு ஆயத்தமாகிக்கொண்டிந்ருதது.

யாழ்ப்பாணத்தில் பல இந்தியநிறுவனங்களும்,சிங்கள தொழிலதிபர்களும் முதலீடு செய்து வியாபாரம் ஆரம்பிக்கின்றார்கள். தனியார் தொலைபேசி நிறுவனங்கள் போட்டி போட்டுக்கொண்டு தங்கள் சேவையை வழங்குகின்றது. எல்லோரிடமும் இப்போ கைத்தொலைபேசி இருப்பது வசதியான வாய்ப்பாகும். எதோ ஒருவகையில் அபிவிருத்தியடைந்தால் நல்லதுதான் காலம் காலமாய் அங்கு வாழும் தமிழர்களின் வயிற்றிலடிக்காதவகையில்.

இனபேதம், மொழிபேதம், வர்க்கபேதமின்றி யாவரும் வாழப்பழகிக்கொண்டால் இலங்கையோர் சுந்தரபூமியாகும். அப்போ வடக்கில் மட்டுமல்ல எத்திசையிலும் வசந்தம்தான்!