மனதைக்கவர்ந்த சோரத
கேளிக்கையான வினோதமான நிகழ்ச்சிகளை காண்பதற்கு இன்று பல தொலைக்காட்சி நாடகங்கள் ,தொடர்கள், நிகழ்ச்சிகள் நாளாந்தம் வலம்வருகின்றன. இருப்பினும் எதைப் பார்ப்பது எதை தவிர்ப்பது என்பதை தெரிவு செய்வதற்கு கூட நேரம் போதாமல் நேரத்தை ஆக்கரமித்துக்கொண்டு இருக்கின்றது இன்றைய எமது நாளாந்த அட்டவணை.
இருந்தபோதும் சமுதாயத்திற்கு பல நல்ல விசயங்களை சொல்ல வேண்டும் என்கிற எண்ணக்கருத்துக்களோடு சில சிந்தனையாளர்கள் தங்கள் ஆக்க பூர்வமான படைப்புக்களையும் கலைத்திறமைகளையும், வெளிக்கொணர முயற்சி செய்துகொண்டுதான் இருக்கிறார்கள்.
இலங்கையில் தமிழர்களுக்கென தனியான தொலைக்காட்சி நிலையங்கள் இல்லாத காலகட்டங்களில் அரச தொலைக்காட்சி நிலையங்களினால் ஒளிபரப்பாகும் தமிழ் நிகழ்ச்சிகள் திரைப்படங்கள் அருமந்தமாக இருந்த தருணங்களும் உண்டு.
ஆனால் தற்பொழுது நிலைமைகள் சற்று மாறி கைவிரல் நுனியில் வேண்டிய தமிழ் தொலைக்காட்சிகளை 24 மணித்தியாலமும் பல தரப்பட்ட தெரிவுகளுடன் கண்டுகளிக்கும் வசதிகள் உண்டு.
இது இப்படியிருக்க சிங்கள நாடகங்களினதும் சினிமாக்களினதும் தரம் சற்றும் குறையாமல் மென்மேலும் மெருகேறிக்கொண்டு போகின்றது என்று சொல்லுமளவிற்கு அவற்றின் படைப்புக்கள் வெளியாகிக்கொண்டு இருக்கின்றன. உதாரணமாக 'மாயா' போன்ற திரைப்படங்களையும் குறிப்பிடலாம். நாடகம் ஒளிப்பதிவு செய்யும் அதே வேளையிலேயே நேரடி குரல்பதிவில் வசனங்களைப் பேசி நடிக்கும் சிங்கள நாடகங்களின் முறை இயல்பான, யதார்த்தமான நடிப்பை வெளிப்படுத்துகின்றன.
அண்மையில் ஒரு சிங்கள தனியார் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகிய சிங்கள நாடகத்தினை எனக்கு எதேச்சையாக பார்க்கக் கிடைத்தது. இந்திய தமிழ் தொலைக்காட்சி நாடகங்களில் உள்ள அனல் தெறிக்கும் யதார்த்தமற்ற வசனங்கள் அதிரவைக்கும் பின்னணி இசை கிராபிக் காட்சிகள் இவை ஒன்றுமில்லாது இயல்பான சமுதாய வாழ்வை சித்தரிக்கும் சிங்கள தொலைக்காட்சி நாடகத் தொடர்கள் என்றும் தனிச்சிறப்புடன் இருக்கின்றன என்பதற்கு தெரண தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் 'சிது' எனும் நாடகம் சான்றாகும்.
குறித்த நாடகத்தொடரில் தோன்றும் அந்த மொட்டைத் தலை சிறுவனின் இயல்பான நடிப்பும் வசீகரிக்கும் முகம் சிந்திக்கத் தூண்டும் பேச்சும் என்னை மட்டுமல்ல தொடரைப் பார்ககும் பலரையும் கவர்ந்திருக்கும் என்பதில் எந்தவித சந்தேகமுமில்லை.
பௌத்தம் என்றால் என்ன? அது எதைப் போதிக்கின்றது? என்கிற அடிப்படை விளக்கம் கூட தெரியாத பலருக்கு இந்த நாடகம் பாடமாக அமையலாம். நாடகத்தின் இயக்குனர் மற்றும் கதாசிரியர் சொல்ல வருகின்ற கருத்தினை ரசிக்கும்படியாக யதார்த்தமாக சித்தரித்திருப்பது பாராட்டத்தக்கது. சிறுவர்களை அழகாக அதில் நடிக்க வைத்திருந்தாலும் 'சோரத' எனும் சிறிய பிக்குவாக நடிக்கும் அந்த சிறுவனின் நடிப்பே பலரையும் கவர்ந்துள்ளது. பௌத்தமதமல்லாதவர்கள் மத்தியிலும் இணையதளங்களிலும் நல்ல வரவேற்பைப் பெற்றுவரும் 'சிது' நாடகம் பெரும்பாண்மை பௌத்த மதத்தவர்களிடையே அதிகளவில் வரவேற்பைப் பெறவில்லை என்பதுதான் மறுக்க முடியாத உண்மை.
கருத்துகள்
கருத்துரையிடுக
உங்கள் கருத்துக்கள்