வெள்ளி, 29 ஜூலை, 2011

ஜூலை கலவரமும் நானும்!

ஜூலை மாதம் வந்தாலே கருப்பு ஜூலையும் வந்துவிடும். ஏற்கனவே வெளியிட்ட பதிவை மீண்டும் பதிவிடுகிறேன்.

பச்சைப்பசேல் விரிப்புடுத்திய அழகிய மலை முகடுகளின் இடையேதான் எங்கள் வீ(கூ)டு இருந்தது. பாலர்பருவ வயதின் நினைவுகளிலும், மனக்கண்களிலும் அதுவோர் விசாலமான வெள்ளித்திரை.


இலங்கையின் நாவலப்பிட்டியெனும் நகரத்திலிருந்து உள்ளமைந்த பல்லேகமவெனும் சிற்றூராகும். பெரும்பாலும் பெரும்பான்மையினத்தவர் மத்தியில் சிறுபான்மைத்துளியாக நாமும் நம்மைப்போல் நாலுபேருமாய் வாழ்ந்துவந்த சம்பவத்தளமது.


வழமைக்கு மாறாகவும் இயல்புக்கு வேறாகவும் மாலை நேரத்தில் விளையாடுவதற்காய் வெளியே செல்வதைத்தடுத்து வைத்தார் என் அப்பா.


ஏன் என்னைத்தடுத்தார் என்பது பின்புதான் என் முத்திய மனசுக்குப்புரிந்தது. பொழுது விடிந்தால் பாலர் பாடசாலையும் மாலை முழுவதும் விளையாட்டும் பின்பு உறக்கமும்தான் என் உலகமாயிருந்தது. அப்போது அப்பாவின் கட்டளையையும் மீறி அயல்வீட்டு பெரும்பான்மையின பெண் நிலாந்தியுடன் விளையாடியதைக்கண்டித்து என்னை உள்ளெ போக உத்தரவிட்டார் என் அப்பா.


அப்போ இருள் கவ்வும் மாலை வேளை6.30த் தாண்டியிருக்குமென நினைக்கிறேன். இரவுச்சாப்பாட்டிற்காய் எனது பாட்டியார் அடுக்களையில் ரொட்டி சுட்டுக்கொண்டிருந்தாள். நானும் என் முக்காலியில் உட்கார்ந்தபடி சாப்பிடத்தயாரானேன். அப்போது அங்கே மிருகத்தனமான,மூர்க்கத்தனமான பல மனிதர்களது குரல்கள் எங்கள் வீட்டைநோக்கி நகர்ந்து கொண்டு வருகிறது. நடக்கப்போவதை ஊகித்து அறிந்துகொண்ட என் அப்பாவும் சித்தப்பா,சித்தி,அய்யா(அப்பாவின் தகப்பனார்) எல்லோரும் வீட்டின் பின்புறவழியால் ஓடத்தயாரானோம். அவர்கள் விசிலடித்து ஆரம்பிக்க நானும் ஓட்டத்தை ஆரம்பித்தேன்.என் கைகளைப்பிடித்து சரசரவென என்னை இழுத்துச்செல்லும் என் சித்திதான் அப்போதைக்கு ராட்சசி. போதாகுறைக்கு ஆசையாய் எப்போதும் என் கால்களைக்கவ்விகொள்ளும் மண்நிற உயர்ந்த செறுப்பை கழற்றி வீசியெறிந்தவளும் அவளே. அப்போதைக்கு அதுதான் என் பெரிய இழப்பு.


வீட்டைவிட்டு வெளியேறி சுமார் 500Mதூரத்தைக்கடந்த்தபோது எங்கள் வீட்டின் யன்னல் கண்ணாடிகள் அடித்து நொறுக்கப்படும் சத்தம் தெளிவாகக்கேட்டது. பெரும்பான்மையின சகோதரர்கள் கைகளில் கோடாரியும்,உருட்டுக்கட்டைகளும் சகிதம் எங்கள் வீட்டை சூரையாடினர். கும்மென்ற இருட்டின் நடுவே அந்தப்பிரதேசத்தையடைந்தபோது அங்கே ஒரு கும்பல் எங்களை நெருங்குகிறது. "கொட்டி எனவா..கொட்டி எனவா..." புலி வருது..புலி வருது..என்ற புலம்பலோடு நம் பெரும்பான்மையின சகோதரர்கள்.உங்கள் இனத்தவர்களால் ஆபத்துவந்தால் எங்களை நீங்கள் காப்பாற்றுங்கள். எங்கள் இனத்தவர்களால் ஆபத்து வந்தால் நாங்கள் உங்களைக்காப்பாற்றுகிறோம் என்பதுதான் காட்டுக்குள் நிகழ்ந்த கைச்சாத்திடப்படாத ஒப்பந்தம்.

வாழவேண்டிய வயதுள்ளவர்கள் நீங்கள்! எங்கேனும் மரங்களில் ஏறி பிழைத்துக்கொள்ளுங்கள் என்பது பாட்டியின் அறிவுரை. உயிர்பிழைக்கவேண்டி ஓடிவரும் வேளையில் தன் பழைய டிரான்சிஷ்டர் பெட்டியைத்தேடியெடுப்பதற்காய் சமயமெடுத்த அய்யாவை திட்டித்தீர்த்தார்கள். உண்மையில் அவறொரு முற்போக்குவாதியாயிருப்பார் போலிருக்கிறது.


ஒருவழியாக ஒரு பெரும்பான்மையினரின் உதவியுடன் அவர்கள் குளியலறை எங்கள் தஞ்சமாக மாறியது. மூச்சுவிடும் சத்தம் கூடக்கேட்காமல் குந்தியிருந்தோம். இத்தனைக்கும் மத்தியில் நானோ என்னதான் நடக்கிறதென்பது புரியாது பிதுங்கிய விழிகளோடும் விம்மிய அழுகையோடும் வாயடைத்து பயந்துபோய் இருக்கிறேன். அப்போதே எனக்குள் சகிப்புத்தன்மை.


ஓசையின்றி அழுதுகொண்டிருந்த என் 5வயது நிலைகண்ட அய்யா எப்போதும் யாரிடமும் அதை நினைவுகூறுவார்.அதனால் என்னவோ என்மீது பாசம் அதிகமென நினைக்கிறேன்.


அன்றையப்பொழுதும் விடிந்தது. முந்தையநாள் பாட்டி சுட்டுக்கொண்டிருந்த ரொட்டித்துண்டுகளை யாரோ கொண்டுவந்து தந்திருந்தார்கள். இங்கே ஒரு உண்மையைச்சொல்லவேண்டும். எந்த இனத்தவர்களால் துரத்தப்பட்டோமோ அவ்வினத்தவர்களினாலேயே பாதுகாக்கவும்பட்டோம்.


எங்களைப்போல் மேலும் பலரது நிலைமைகள் இப்படியிருக்க எங்கெல்லாமோ அலைந்து திரிந்து ஒரு விசாலமான வீட்டிலே தஞ்சமடைந்தோம் நாமெல்லோரும். அப்போது முதல் அதுதான் முகாம் நாங்கள்தான் அகதிகள்.கூடு கலைக்கப்பட்டு இன்றும் கூடின்றியலையும் சிதறடிக்கப்பட்ட பறவைகள் நாங்கள்.


இற்றைக்கு 26வருடங்களைக்கடந்து வந்தாலும் நெஞ்சைவிட்டகலாத நீங்காத கசப்பான அனுபவங்களை என்பதிவிலிட்டு உங்களுடன் பகிர்ந்துகொள்வதில் ஆறுதலடைகிறேன். வாழ்க தமிழ்! வழர்க தமிழ் சமுதாயம்!

1 கருத்து:

  1. உங்கள் தளத்திற்கு வரும் வாசகர்கள் தமிழில் பின்னூட்டமிடும் வசதியை ஏற்படுத்தித் தரும் கமெண்ட் பகுதியில் தமிழ் தட்டச்சுப் பலகை அமைக்கும் முறை இப்போது வந்து விட்டது, உங்கள் வலைமலரில் இந்த தொழில் நுட்பத்தை அமைத்து அதிக பின்னூட்டங்களைப் பெறுங்கள் மேலும் விவரங்களுக்கு இங்கே சொடுக்கவும் 

    பதிலளிநீக்கு

உங்கள் கருத்துக்கள்