ஜூலை கலவரமும் நானும்!
ஜூலை மாதம் வந்தாலே கருப்பு ஜூலையும் வந்துவிடும். ஏற்கனவே வெளியிட்ட பதிவை மீண்டும் பதிவிடுகிறேன். பச்சைப்பசேல் விரிப்புடுத்திய அழகிய மலை முகடுகளின் இடையேதான் எங்கள் வீ(கூ)டு இருந்தது. பாலர்பருவ வயதின் நினைவுகளிலும், மனக்கண்களிலும் அதுவோர் விசாலமான வெள்ளித்திரை. இலங்கையின் நாவலப்பிட்டியெனும் நகரத்திலிருந்து உள்ளமைந்த பல்லேகமவெனும் சிற்றூராகும். பெரும்பாலும் பெரும்பான்மையினத்தவர் மத்தியில் சிறுபான்மைத்துளியாக நாமும் நம்மைப்போல் நாலுபேருமாய் வாழ்ந்துவந்த சம்பவத்தளமது. வழமைக்கு மாறாகவும் இயல்புக்கு வேறாகவும் மாலை நேரத்தில் விளையாடுவதற்காய் வெளியே செல்வதைத்தடுத்து வைத்தார் என் அப்பா. ஏன் என்னைத்தடுத்தார் என்பது பின்புதான் என் முத்திய மனசுக்குப்புரிந்தது. பொழுது விடிந்தால் பாலர் பாடசாலையும் மாலை முழுவதும் விளையாட்டும் பின்பு உறக்கமும்தான் என் உலகமாயிருந்தது. அப்போது அப்பாவின் கட்டளையையும் மீறி அயல்வீட்டு பெரும்பான்மையின பெண் நிலாந்தியுடன் விளையாடியதைக்கண்டித்து என்னை உள்ளெ போக உத்தரவிட்டார் என் அப்பா. அப்போ இருள் கவ்வும் மாலை வேளை6.30த் தாண்டியிருக்குமென நினைக்கிறேன். ...